அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Education Loan in Tamil | கல்விக்கடன் பெறுவது எப்படி?

Education Loan in Tamil | கல்விக்கடன் பெறுவது எப்படி?

Table of Contents

Education Loan in Tamil

இன்றைய இளைய சமுதாயத்திற்கு பொது துறை வங்கிகள் மட்டும்தான் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குமா என்ற சந்தேகம் இருக்கலாம், ஆனால் அது அவ்வாறு இல்லை. மாணவர்கள் உயர் கல்வியை பெறும் நோக்கில், ரிசர்வ் வங்கி எல்லா வங்கிகளும் தனியார் வங்கிகள் உள்பட கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்விக்கடன் என்றால் என்ன?

வசதி படைத்த மாணவர்கள் எளிதாக பொறியியல், மருத்துவம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இதர படிப்புகளுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி உயர் கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். அதேசமயம் ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி படிப்பது எட்டா கனியாக இருந்தது. வசதி படைத்தவர்கள் போன்று, உயர் கல்வி படிப்பதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், ரிசர்வ் வங்கி பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் யாவும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இத்திட்டம் அமலுக்கு வந்தபின், ஏழை எளிய பெற்றோர்கள் பிளஸ் 2 முடித்தபின் தங்கள் குழந்தைகளுக்கு வங்கி கடனையாவது வாங்கி, ஒரு நல்ல உயர்கல்வி நிறுவனத்தில் படித்து வைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. தற்போதும், மாணவர்கள் வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது மலையை தூக்கி தலையில் வைத்த கதையாகவே உள்ளது. வங்கி கடன் பெறுவதில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கு கடலளவு சந்தேகம் உள்ளது என்பதை அனைவராலும் அறிய முடிகிறது. அதன் விளக்கங்கள் ஒவ்வொன்றாக கீழே காணலாம்.

கல்விக்கடன் பெற என்ன தகுதி?

Also Read: அறிவோம் வேளாண் பல்கலை பட்டயப்படிப்பு

முதலில் மாணவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வயது வரம்பும் நிர்ணயிக்கவில்லை. நல்ல மதிப்பெண் பெறுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் எந்த கல்வி படிக்க விரும்புகிறாரோ அதற்கான முழுத்தகுதியையும் பெற்றிருக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் பயில்வதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு மட்டுமில்லாமல், நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம், என்று கூறுகின்றனர்.

கல்விக்கடன் ஆவணங்கள் என்ன?

Education Loan in Tamil
Education Loan in Tamil

மாணவரின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முக்கியம். இதனுடன், கல்லூரியில் சேருவதற்கான அனுமதி அட்டை, ஆளறிச்சான்று, கல்லூரியின் கட்டண விவரம், மாணவரின் இருப்பிடச்சான்று, ஆதார், பெற்றோர் வருமான வரிச்சான்று, இரு புகைப்படங்கள், வங்கி கணக்கில் கடைசி ஆறு மாத பணிபரிவர்த்தனை அறிக்கை உள்ளிட்ட அவசியம்.

கல்விக்கடன் பெற ஒவ்வொரு வங்கியிலும் விண்ணப்பிக்க வேண்டுமா?

மாணவர்கள் அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாடு முழுவதிலும் கல்வி கடன், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வித்யா லட்சமி.இன் இந்த இணையதள வசதியை வழங்கி உள்ளது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்களுக்கு ஒற்றைச் சாளர முறை (single window system) அனைத்து தகவல் வழங்கக்கூடியதாக இந்த இணையதளம் செயல்படுகிறது. இந்த இணையதளத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பதிவு செய்துள்ளன. இதன் மூலம், பல்வேறு வகையான கல்வி கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் வித்யாலட்சுமி இணையதள முகவரியில் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, தேவைப்படும் கடன், கல்வி நிறுவனத்தின் பெயர் ஆகியவை பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின் மாணவர்களுக்கு எந்த வங்கியில், எவ்வளவு கடன் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும். அதன்பின்னர், மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, கல்விக்கடன் பெற வங்கியில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலமாகவே சமா்ப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பத்துடன் பான் எண், ஆதார் எண், கல்விச்சான்றிதழ், இருப்பிட முகவரி, பிறப்புச்சான்று, குடும்ப வருமான சான்று, கல்லூரி வழங்கும் ஆளறி சான்று, பெற்றோரின் ஆதார் எண் உள்ளிட்ட சான்றிதழ்கள் விவரங்கள் இணைக்க வேண்டும்.

வாடகை வீட்டில் வசிப்பவர் கல்விக்கடன் பெற முடியுமா?

கல்கல்விக்கடன் வழங்க மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. குறிப்பாக, மாணவரின் பெற்றோருக்கு எந்தவித நிரந்தர வருமானமும் இல்லாவிட்டாலும், கடன் வழங்க வேண்டும். இதனால், மாணவரின் பெற்றோருக்கு மாதம் வருமானம் எவ்வளவு, எவ்வளவு கடன், அசையும் – அசையா சொத்துகள் விவரம் என்பது போன்ற விவரங்கள் அவசியம் இல்லை. வாடகை வீட்டில் வசித்தாலும், கடன் பெற தகுதியானர்கள்தான். ரூ.4 லட்சம் வரை கடன் பெறுபவர்களின் பெற்றோரிடம் எந்த ஆவணங்களையும், உத்தரவாதத்தையும் கேட்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. கடனை மாணவர்கள் திருப்பி செலுத்துவாரா? என்பதை பார்க்க வேண்டுமே தவிர, பெற்றோரின் தகுதியை பார்க்கக்கூடாது.

கல்விக்கடன் தனியார் வங்கியில் பெற முடியுமா?

ஒரு மாணவருக்கு பொதுத்துறை வங்கிதான் கடன் வழங்க வேண்டும், தனியார் வங்கிதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கு அலைக்கழிப்பு செய்யக்கூடாது என்பதற்காக எல்லா வங்கிகளும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாணவர் அருகில் உள்ள வங்கியில் கூட விண்ணப்பிக்கலாம். அங்கு ஓருேவளை கடன் மறுக்கப்பட்டால், மறுக்கப்படுவதற்கான சான்றிதழ் பெற்று, அருகில் உள்ள மற்றொரு வங்கியில் கொடுத்து கடன் பெறலாம்.

வெளியூர் சென்றால் எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கும் காலத்தில் அவர்கள் எங்கு வசிக்கின்றனரோ அந்த இடத்தில் இருப்பிடச்சான்று இருந்தால் வீட்டின் அருகில் உள்ள வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக்கடன் கிடைக்கும்?

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் கடன் பெற முடியும். நர்சரி படிப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பதற்கும், குழந்தைகள் கணிப்பொறி வாங்குவதற்கும், ஐஏஎஸ்., ஐபிஎஸ் பயிற்சி பெறுவதற்கும் கூட வங்கி கடன் வழங்கப்படும். ஐடிஐ., பாலிடெக்னிக் போன்ற குறுகிய கால தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் அவர்களின் படிப்பின் கால அளவுக்கு ஏற்ப கிடைக்கிறது. இருப்பினும் மாணவர்கள் சேரும் கல்லூரி, படிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். அந்த படிப்பு அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளுக்கு பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதில்லை.

கல்விக்கடன் அதிகபட்சம் எவ்வளவு பெற முடியும்?

பொதுவாக கல்வி கடனுக்கான உச்சவரம்பு எதுவும் இல்லை. இருப்பினும் உள்நாட்டு படிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்குகிறது. செக்யூரிட்டி, ஜாமீன், அடமானம் எதுவுமின்றி ரூ.4 லட்சம் வரை கடன் பெறலாம். நான்கு லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடனுக்கு 3ஆம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அந்த 3ஆம் நபர் வருமானவரி செலுத்துபவராக இருக்க வேண்டும். மேலும், 5 சதவீதம் விளிம்புத் தொகையும் செலுத்த வேண்டும். ரூ.7.50 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு விளிம்பு தொகையுடன் ஏதேனும் சொத்துகளை உத்தரவாதமாக காண்பிக்க வேண்டும். மேலும் வெளிநாடுகளுக்கு சென்று மேல்படிப்பு பயில்வதற்கு கடன் வாங்குபவர்கள் 15 சதவீதம் விளிம்பு தொகை செலுத்த வேண்டும்.

ஒரே வீட்டில் இருவர் கல்விக்கடன் பெற வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக வங்கி கடன் கிடைக்கும். ஒரே வீட்டில் இரண்டு மாணவர்கள் இருக்கும்போது ஏற்கனவே ஒருவர் வங்கி கடன் பெற்று படித்து கொண்டிருக்கலாம். இந்த நிலையில் மற்றொரு மாணவரும் அதே வங்கியில் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி இருவரின் மொத்த கடனும் ரூ.4 லட்சம் வரை இருந்தால் பிணை எதுவும் தேவையில்லை. அதற்கு அதிகமாக இருந்தால், 3வது நபரின் உத்தரவாதம், சொத்து உத்தரவாதம் விளிம்பு தொகை போன்றவை தேவைப்படும்.

தனியார் இடஒதுக்கீட்டில் கல்விக்கடன் கிடைக்குமா?

அரசிடம் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரிகளில் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு சேரும் மாணவர்களுக்கு நிச்சயம் கல்வி கடன் கிடைக்கும்.

கல்விக்கடன் பெற வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கடனுக்கு விண்ணப்பித்த பிறகு, சம்மந்தப்பட்ட வங்கியில் மாணவரும் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரும் இணைந்து வங்கி கணக்கு தொடங்குவது கட்டாயம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கல்விக்கடன் எந்தெந்த பிரிவுகளுக்கு வழங்கப்படும்?

முக்கியமாக மாணவர்களுக்கு அறிந்திருக்க வேண்டியது, கல்வி கட்டணம், விடுதி கட்டணம், டியூசன் கட்டணம், தேர்வு கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம், கணினி, மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்குவது போன்ற செலவினங்களுக்கான தொகையை கல்வி கடனில் செலுத்த முடியும். மற்றபடி தனியார் கல்லூரிகளில் கேட்கப்படும் நன்கொடை கேப்பிடேஷன் பீஸ் போன்றவற்றுக்கு கல்வி கடன் கிடைக்காது. தேர்வு கட்டணம் போன்றவை குறித்து முன்கூட்டியே குறிப்பிடுவது நல்லது.

கல்விக்கடன் வட்டி விகிதம் என்ன?

வங்கிகளின் விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுபாடும். பொதுவாக குறைந்தபட்சம் 7.30 சதவீதம் முதல் அதிக பட்சம் 16.90 சதவீதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர்ந்து, இடைவிடாமல் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கும் ஒரு சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல் கல்வி கடனுக்களுக்கான பரிசீலனை கட்டணம் (இந்தியாவுக்குள் படிப்பவா்களுக்கு) வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது.

எந்த வட்டி விகிதம் மாணவர்களுக்கு ஏற்றது?

கல்வி கடனுக்கான வட்டி வீட்டு கடன்களுக்கான வட்டியை விட சிறிது கூடுதலானவை. பிக்சட் வட்டி, ப்ளோட்டிங் வட்டி என்ற இரண்டு முறைகளில் வட்டி விகிதம் உள்ளது. பிக்சட் வட்டியை நிர்ணயிப்பதில் பல வங்கிகள் குழப்பமான நடைமுறையை கொண்டுள்ளன என்பதால் இதில கவனமாக இருக்க வேண்டும். இரு வட்டி விகிதங்களுக்கும் இடையே சிறிய அளவுதான் வித்தியாசம் உள்ளது என்றால் பிக்சட் வட்டியை தேர்வு செய்வதே சிறந்தது.

கல்விக்கடன் அசல், வட்டி எவ்வாறாக இருக்கும்?

படிப்பு இறுதி வரை அசல் கொடுக்க தேவையில்லை. மாணவர்கள் விரும்பினால் வட்டியையும் அசலையும் முதலில் இருந்து தவணை முறையில் செலுத்தலாம். ஆனால், வங்கிகள் இதை வற்புறுத்தக்கூடாது. பொதுவாக கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க இரண்டு திட்டங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கடன்தொகை பெற்ற மாதத்தில் இருந்தே வட்டி செலுத்துவது ஒருமுறை. பணியில் சேர்ந்த பிறகு கடன் தொகையுடன், வட்டி தொகையையும் சேர்த்து 60 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை மாதாந்திர தவணையில் திரும்பச் செலுத்துவது மற்றொரு முறை. படிக்கும்போதே மாதம் இஎம்ஐ செலுத்தினால் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

கல்விக்கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உண்டா?

கலந்தாய்வு மூலம் தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உள்ளது. அவர்களின் பெற்றோர் ரூ.4.50 லட்சம் ஆண்டு வருமானத்திற்குள் இருக்கும்பட்சத்தில் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே வருமான சான்றுடன் வட்டித்தள்ளு படிக்கும் கடிதத்தில் கொடுத்துவிடலாம்.

வேலை கிடைக்காவிட்டாலும் கல்விக்கடன் செலுத்த வேண்டுமா?

படித்து முடித்து வேலையில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள் அல்லது படிப்பு முடிந்த ஓராண்டுக்கு பிறகு, இதில் எது முன்னதாக நிகழ்கிறதோ அப்போது மாத தவணைகள் மூலம் கடன், வட்டியை திரும்ப செலுத்தலாம். ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற்றவர் 10 ஆண்டுகளுக்குள் கடனையும், வட்டியையும் திரும்ப செலுத்த வேண்டும். ரு.7.50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்கள் 15 ஆண்டுகளில் கடனையும், வட்டியையும் திரும்ப செலுத்த வேண்டும். ஒரு வேளை மாணவருக்கு வேலை கிடைக்காவிட்டால், அதுதொடர்பான விவரத்தை சம்மந்தப்பட்ட வங்கயில் தெரிவித்தால் கடனை திருப்பி செலுத்த மேலும் கால அவகாசம் வழங்கப்படும்.

எந்த சூழலில் ஒருவருக்கு கல்விக்கடன் மறுக்கப்படும்?

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவர் அந்த வங்கியில் ஏற்கனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பி செலுத்தாமல் இருந்தால் ( தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம். மேலும் மாணவரின் குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் கல்வி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் இருந்தாலோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் வங்கியில் பெற்ற பிற வகை கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தாலோ வங்கி கடன் மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும்.

முதுகலை படிப்பிற்கு கல்விக்கடன் கிடைக்குமா?

நிச்சயம் கிடைக்கும். ஒரு மாணவர் கல்வி கடன் பெற்று பட்டப்படிப்பி முடித்த நிலையில்,பி.இ பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க மீண்டும் கல்வி கடன் பெறலாம். இதேபோல், பி.எஸ்சி முடித்தவர் எம்.எஸ்சி.க்கும் பி.இ முடித்தவர், எம்.இ.க்கும் கல்வி கடன் பெற முடியும்.

கல்விக்கடன் நிர்ணய அளவு என்ன?

கல்வி கடனுக்காக வங்கியை அணுகும்போது எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு கடன் வழங்கிவிட்டோம், எனவே வேறு வங்கியை அணுகுங்கள் என்று சில வங்கிகள் கூறுகின்றனவே என்ற கேள்விக்கு, இதற்கு அப்படி எல்லாம் கூற முடியாது என்பதே பதில். இந்த ஆண்டு 50 பேருக்குதான் கொடுப்போம், 100 பேருக்குதான் கொடுப்போம் என்று வங்கிகள் கூறி தட்டிக் கழித்துவிட முடியாது. எவ்வளவு பேர் வந்தாலும், தகுதியுள்ளவர்களுக்கு கடன் கொடுத்தே ஆக வேண்டும். சிலர் வேறு வங்கியில், கணக்கு வைத்திருக்கக்கூடும். அந்த வங்கியில் கல்வி கடன் கொடுக்க மறுத்தால், அவர்களிடம் ஒப்புதல் கடிதத்தை பெற்று, எந்த வங்கியில் கல்விக்கடன் பெற வேண்டுமா? அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கி கடன் விஷயத்தில் இடைத்தரகர்களை நம்பாமல், பெற்றோரே வங்கியை நேரடியாக அணுகுவது நல்லது. சில வங்கிகள் கல்வி கடன் வழங்காமல் தட்டிகழிப்பதால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு கிராமம், வார்டு வீதம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.

சரியாக படிக்கவில்லையென்றால் கல்விக்கடன் நிறுத்தப்படுகிறதா?

சில வங்கிகள் ஒவ்வொரு பருவத்திலும் (செமஸ்டர்) மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழை கேட்டு பெறுகின்றனர். ஏனெனில் மாணவர்கள் ஒரு செமஸ்டரில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்த செமஸ்டர்க்கான கட்டணத்தை கொடுப்பதில்லை. மாணவர்கள் நன்கு படித்த வேலையில் சேர்ந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

கல்விக்கடன் புகார் யாரிடம் தெரிவிப்பது?

வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான புகார்கள் அளிக்க விரும்பினால் முதலில் சம்மந்தப்பட்ட வங்கிகளிடமே புகார் அளிக்க வேண்டும். அங்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில் வங்கி குறைதீர்ப்பு ஆணைய அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். தகுதி இருந்தும் கடன் வழங்க மறுப்பது, படிப்பு காலம் முன்னரே கடனை திருப்பி செலுத்த வற்புறுத்துவது போன்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் விதிகளை மீறும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம்.

முன்னதாக சம்மந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்திலும், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் புகார் அளிக்கலாம். சில வங்கிகள் எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளன. மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக எஜூகேஷனல் லோன் டாஸ்க் உள்ளிட்ட அமைப்புகள் இயங்கி வருகின்றன.

கல்விக்கடன் வழங்க வங்கிகள் தயங்குவது ஏன்?

கல்விக்கடன் பெறுபவர்களில் பெரும்பாலானர்வர்களில் அதை சரிவர திருப்பி செலுத்துவதில்லை. கடன் பெற்றவர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே அதை திருப்பி செலுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கல்வி கடன்கள் வாரா கடன்களாகவே இருப்பதால்தான் வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதற்காக மாணவர்களை அலைகழிக்க வைக்கின்றன. எனவே, கல்வி கடன்பெறுபவர்கள் அதை திருப்பி செலுத்த வேண்டும். அதன்மூலம் பின் தொடர்ந்து வரும் மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமின்றி கல்வி கடன்கள் பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கிகள் வழங்கும் கல்வி கடன்கள் தற்போது கிரெடிட் கியாராண்டி ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன. இதனால் தாங்கள் வழங்கும் கடன் திரும்பி வராமல் போய்விடுமோ என்ற வங்கிகள் இப்போது அஞ்சுவதில்லை.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும். யாராவது ஒரு மாணவர் பயன் பெறட்டுமே…

Related Articles

Latest Posts