Disaster Management in Schools in Tamil | பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பங்கு
போிடா் மேலாண்மை என்றால் என்ன? – What is Disaster Management?
நாம் வாழும் பூமியானது தனது இயற்கைச் சமநிலையைத் தானே பராமரித்துக் கொள்கிறது. இந்தச் சமநிலை சில நேரங்களில் மாறுபாடு அடையும் போது மனிதர்களின் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் விளைவிப்பதாக அமைகின்றது. இதனை இடராக நாம் உணர்கிறோம். இந்த இடரின் விளைவாக உண்டாகும் பெரும் சேதத்தையே நாம் பேரிடர் என்கிறோம்.
Also Read: எப்படி பள்ளி தரங்கள் குறித்து அறிவது
இந்தப் பேரிடரினால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது, தவிர்ப்பது, பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பொருத்தமான உதவிகளை உறுதிப்படுத்துவது மற்றும் விரைவான, பயனுள்ள மீட்சியை அளிப்பதே பேரிடர் மேலாண்மை ஆகும்.
கோவிட் – 19 விளக்கம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
கோவிட் – 19 நோய் தொற்று முதன் முதலில் சீனாவின் வுகாண் நகரில் 2019 டிசம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டது. ஜனவரி 30, 2019 அன்று கோவிட் -19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசர நிலையாகவும் மார்ச் 11, 2020 அன்று பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. கொரோனா வைரஸ்கள் விலங்குவழிதொற்றும் வைரஸ்கள். விலங்கு என்றால், மனிதனும் அடக்கம். இதுவரை ஏழு வகையான கொரோனா வைரஸ்கள்
மனிதர்களிடமும், விலங்குகளிடையேயும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா என்றால் கிரீடம் என்று பொருள். நுண்ணோக்கி வழியே காணும்போது – கொரோனா வைரஸ்களின் பரப்பில் கிரீடம் போன்ற கூர்முனை ஏற்பிகள் இருப்பதால், இந்தப் பெயர்.
சாதாரண சளி ஏற்படுத்தும் கொரோனா வைரஸில் இருந்து, இறப்பை ஏற்படுத்தக்கூடிய சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS), போன்ற ஏழு வகை கொரோனா வைரஸ்கள் நமக்குத் தெரியும். பொதுவாக, மேல்-நுரையீரல் சார்ந்த நோய் அறிகுறிகளை இவை ஏற்படுத்தும். இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸின் பெயர் – SARS-CoV-2, இந்த வைரஸ் நமக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நோயின் பெயர் – COVID -19. COVI என்றால் CORona VIrus D என்றால் DISEASE மற்றும் 19 என்பது இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. இன்றைய நிலையில்
பொதுவாக நாம் கொரோனா வைரஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது 2019 N Cov (New Strain Corona Virus) என்றும் அழைக்கப்படுகிறது.
கொரோனா சோதனைகள்
தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதித்தப்படி கொரோனா சோதனைகள் பின்வரும் வகைகளில் நடைபெறுகிறது. ஸ்வாப் பி.சி.ஆர் (Swab polymerase chain
Reaction, PCR). சோதனைகள் ட்ரூநாட் (True Nat) சோதனைகள், சி.பி.என்.ஏடி சோதனைகள். தமிழ்நாட்டில் 66 அரசு மருத்துவமனைகள் / ஆய்வகங்கள் மற்றும் 126 தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோயறிதல் முறைகளைப் பயன்படுத்தி COVID-19 சோதனை நடத்தப்படுகிறது.
யாரிடமிருந்து வந்தது என்பதை அறிந்து அந்த நோய் கிருமி பரப்பும் நபரை தனிமைபடுத்துவது அவசியம். அதுபோல யாருக்கு நோய் ஏற்படுகிறது என்பதை கவனிக்க தொடர்ந்து சமூகத்தில் அனைவரின் உடல் வெப்ப நிலையை கண்காணிப்பதும் அவசியம்.
கொரோனா உதவி எண்கள்
1075 அல்லது மத்திய உதவி சேவை எண் +91-11 2397046 அழைக்கலாம். மாநில உதவி எண். 044-29510500, 2951 0400, 2951 0500, 2430 0300, 4627 4446. கைப்பேசி எண் : 94443 40496 , 8754448477
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்
1. கைகளை சோப்பு அல்லது கைசுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும்.
2. சகமாணவர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
3. பள்ளியில் உள்ள பொருட்களை பயன்படுத்தும்போதும், உணவு உண்ணுவதற்கு முன்பு மற்றும் உணவு உண்டபின்பு, இருமல் மற்றும் தும்பல் வந்த பிறகு கைகளை கண்டிப்பாக கழுவுதல் வேண்டும்.
4. பாதுகாப்பு கருதி அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

கொரோனா நோய் பரவும் விதம்
மற்றும் பாதுகாப்பு தொற்றுள்ள ஒரு நபர் தும்மும்போதோ அல்லது இருமும்போதோ வெளிவரும் நீர்த்துளிகள் வழியாக ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்த வைரஸ் பரவும். இத்திரவத்துளிகள், கதவு, கைப்பிடி, இடுக்கைகள், பயன்படுத்தும் பொருட்கள், என எங்கு வேண்டுமானாலும் இருக்கக்கூடும் என்பதால் அதிகவேகமாக இத்தொற்று பரவி, உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு
- கை கழுவும் மையம் அமைக்க வேண்டும்.
- சோப்பு அல்லது சோப்பு திரவம் கொண்டு மாணவர்கள் தங்கள் கைகளை நன்றாக கழுவிய பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.
- தெர்மல்ஸ்கேன் பயன்படுத்தி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். சராசரி வெப்பநிலையைவிட அதிகமாக இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வழிவகை செய்தல் வேண்டும்
- குறிப்பிட்ட கால இடைவெளியில் பள்ளிவளாகம், வகுப்பறை மற்றும் கைகழுவும் இடம் போன்றவற்றிற்கு கிருமிநாசினி தெளித்தல் வேண்டும்.
- ஓவ்வொரு வகுப்பறையிலும் கை சுத்திகரிப்பான் கொண்டு மாணவர்களின் கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.
- அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
- இறை வணக்கம் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும். உணவகம், சுற்றுலாத் தலங்கள், பூங்கா, திரையரங்கம், விளையாட்டு திடல் உள்ளூர் சந்தைகள், கடைத்தெருக்கள், விளையாட்டுத் திடல்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது.

இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள்
புயல் (Cyclone)
கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும்போது, அதனைச் சுற்றியுள்ள அதிக அழுத்தத்துடன் கூடிய காற்று, தாழ்வு மண்டலமாக மாறி, கரையை நோக்கித் தீவிரமாக நகரும். இக்காற்று ‘புயல்’ எனப்படும். அப்போது பலத்த காற்றும், கன மழையும் அதிவேகமாகக் கரையைத் தாக்கும். இதனால், மரங்கள் வேரோடு சாய்தல், குடியிருப்புகள் சேதமடைதல், வெள்ளப் பெருக்கு முதலியவை ஏற்படும்.
புயல் பாதுகாப்பு முறைகள்
❖ வதந்திகளை நம்பக் கூடாது. வானொலி, தொலைக்காட்சி செய்திகளைக் கவனித்து செயல்படுதல் வேண்டும்.
❖ மரங்களிலிருக்கும் இலை, தழைகளை அகற்றி கிளைகளின் பாரத்தைக் குறைத்தல் வேண்டும், உடைமைகள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திருத்தல் வேண்டும்.
❖ உணவுப் பொருள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, எரிபொருள், குடிநீர், முதலுதவிப் பெட்டி முதலிய இன்றியமையாப் பொருள்களைச் சேமித்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
கன மழை, வெள்ளம் (FLOOD)
அதிக மழைப்பொழிவு, புயல், பனி உருகுதல், அணைக்கட்டுகள் உடைதல் காரணங்களினால், நீர் அதன் பாதைக்கும் மேலாக வழிந்தோடி அருகில் உள்ள நிலப்பரப்பை மூழ்கடித்துச் செல்லும் போக்கே, ‘வெள்ளப்பெருக்கு’ எனப்படுகிறது. இதனால் விளைநிலம் பாதிக்கப்படுதல், குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்படுதல், நீர்மாசுபடுதல், தொற்றுநோய் பரவுதல், உயிர்ச்சேதங்கள் ஏற்படுதல், இயல்புநிலை பாதிக்கப்படுதல் போன்ற சூழல்கள் ஏற்படுகின்றன.
கன மழை, வெள்ளம் (FLOOD) பாதுகாப்பு முறைகள்
வசிக்கும் பகுதி வெள்ளத்திற்கு உட்படும் தன்மை கொண்டதா என்பதைக் கண்டறிய வேண்டும். வெள்ளப்பெருக்குக் காலத்தில் வெளியில் செல்லுதல் கூடாது, மின் சாதனங்களைத் தொடக் கூடாது. தாழ்வான பகுதியில் பள்ளி இருப்பின், மாணவர்களைச் சற்று உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மின்னல் மற்றும் இடி (Lightning and Thunder)
வளிமண்டலத்தில் மேகக் கூட்டங்களுக்கிடையே உருவாகும் மின்சாரம் ஒளியையும், வெப்பத்தையும் உண்டாக்குகிறது. இதுவே ‘மின்னல்’ ஆகும். இம்மின்னல் கீழே இறங்கும்போது பெருஞ்சத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுவே ‘இடி’ எனப்படுகிறது.
மின்னல் மற்றும் இடி பாதுகாப்பு முறைகள்:
திறந்தவெளிக்குச் செல்லாதிருத்தல், மரத்தடிக்குச் செல்லாதிருத்தல், பாதுகாப்பான இடம் தேடி ஒதுங்குதல், பாதுகாப்பான இடம் இல்லையெனில், குத்துக்காலிட்டு உட்கார்ந்து பாதங்களை நெருக்கமாக வைத்துக்கொண்டு, தன்னிடமுள்ள உலோகப் பொருள்களைத் தொலைவில் வைத்தல், அலைபேசியை அணைத்து வைத்தல்.
சுனாமி (Tsunami)
கடலடியில் அல்லது கடலோரத்தில் நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு, விண்கற்கள் வீழ்தல் ஆகியவற்றின் காரணமாகக் கடலில் பேரலைகள் தோன்றிக் கடற்கரையைத் தாக்கும் நிகழ்வே ‘சுனாமி’ எனப்படுகிறது. இதனால், கடலோரத்திலுள்ள துறைமுகங்கள், குடியிருப்புப் பகுதிகள் பெருஞ்சேதத்திற்கு உள்ளாகின்றன. மேலும் அதிகப்படியான உயிரிழப்புகளும் பொருளாதாரச் சேதங்களும் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு முறைகள்
சுனாமி அறிவிப்புக் கிடைத்தவுடன் தாமதமின்றி கடற்கரையிலிருந்து தூரமான நிலப்பகுதிக்கு அல்லது மேடான இடங்களுக்கு அல்லது சுனாமிப் பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக இடம்பெயர்தல்.
நிலநடுக்கம் (Earthquake)
நிலப்பலகைகளின் நகர்வு, எரிமலை வெடிப்பு, புவியின் உட்பகுதியில் ஏற்படும் பாறைப்பிளவு முதலிய காரணங்களினால் குறிப்பிட்ட நிலப்பகுதியில் திடீரென ஏற்படுகின்ற அதிர்வே, ‘நிலநடுக்கம்’ ஆகும். இதனால் கட்டடங்கள், குடியிருப்புகள், சாலைகள் ஆகியன சேதமடைந்து அதிக அளவு பாதிப்புகள் ஏற்படும்.
பாதுகாப்பு முறைகள்:
பதற்றமடைதல் கூடாது, 30 வினாடிக்குள் கட்டடத்தைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பின் வெளியேறுதல் வேண்டும். இல்லையெனில் உறுதியான மேசைக்கு அடியில் சென்று பிடரியைக் கைகளால் மறைத்துக் கொண்டு, மேசையின் கால்களைப் பிடித்தபடி, உட்காரவேண்டும்.
நிலச்சரிவு (Landslide)
அதிகமான மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஏற்படும்போது புவியீர்ப்பு விசையின் காரணமாக உயரமான நிலப்பகுதியிலிருந்து சரிவான பகுதியை நோக்கிப் பாறைகள், கற்கள், மண், சேறு ஆகியவை நகர்தலே, ‘நிலச்சரிவு’ எனப்படுகிறது. இதனால் கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகள் மண்ணுக்குள் புதைதல், காடுகள் அழிதல், உயிரிழப்புகள் ஏற்படுதல் ஆகியவை நிகழ்கின்றன.
பாதுகாப்பு முறைகள்:
சரிவு மிகுந்த பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்காமல் இருத்தல் பாதுகாப்புச் சுவர் ஏற்படுத்துதல், வீடுகளைச் சுற்றி மண், கற்கள், சேறு ஆகியவை விலகிச் செல்ல மாற்றுப்பாதை அமைத்தல்.
மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள்
சாலை விபத்துகள்
சாலையில் செல்லும் ஓர் வாகனம் மற்றொரு வாகனத்தின்மீதோ, பொருளின்மீதோ, உயிரினத்தின் மீதோ மோதி சேதத்தை விளைவிப்பது ‘சாலை விபத்து’ எனப்படுகிறது.
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பேருந்து நின்றவுடன் ஏறவும்/இறங்கவும், படியில் பயணம் செய்யக்கூடாதெனவும் அறிவுறுத்துதல், சாலை ஓரங்களிலுள்ள பள்ளி மாணவர்கள், பள்ளிவிடும் நேரத்தில் வரிசையாகவும், அமைதியாகவும் வெளியே செல்வதற்குப் பழக்குதல் மற்றும் ஆசிரியர் உதவுதல்.
ஆழ்துளைக்கிணறு விபத்து
நீரின் தேவையினைக் கருதி நிலத்தடியில் ஆழ்துளைக்கிணறு தோண்டப்படுகிறது. சில நேரங்களில் நீர் இன்மையின் காரணமாக சில ஆழ்துளைக்கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இது மனித உயிருக்கு ஆபத்தாக முடிகின்றது.
உரிய அனுமதியுடன் ஆழ்துளைக்கிணறு அமைக்க வேண்டும். நீர் இல்லையெனில் அதனை மூடிபோட்டு /கான்கிரீட் மூலம் முறையாக அடைக்க வேண்டும்.
நீரில் மூழ்குதல்
நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ சென்று நீரில் மூழ்கி விடுவர். அவ்வாறு நீரில் மூழ்கியவுடன் காற்றைச் சுவாசிக்க இயலாமல், மூக்கின் வழியாக நீர் உட்சென்று இறக்க நேரிடுதலே நீரில் மூழ்குதல் எனப்படும். ஒவ்வொரு ஆண்டும் கிணறு, குளம், ஏரி, கடல் போன்றவற்றில் குளிக்கச் செல்லும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.
எச்சரிக்கை பலகை வைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுவாசிப்பதில் ஏதேனும் தடை இருந்தால் செயற்கை சுவாச முறையைக் கையாண்டு மருத்துவர் வரும்வரை உயிரைக் காப்பாற்றுதல் வேண்டும்.
கட்டடம் இடிந்து விழுதல்
குறைந்த உறுதித்தன்மையுடன் கட்டடங்கள் கட்டும்போது மழை, மின்னல், நில அதிர்வு, வெடிவைத்துத் தகர்த்தல் போன்ற காரணங்களால் அக்கட்டடங்கள் இடிந்துவிழுகிறது. அப்போது உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகின்றன.
பழைய கட்டடங்களைச் சுற்றி தடுப்பு வேலி ஏற்படுத்துதல், பள்ளிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ள கட்டடங்களில் வகுப்புகள் நடத்தாதிருத்தல். அவற்றை அகற்ற, உரிய துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், தரமான கட்டுமானப் பொருள்களை கொண்டு கட்டடங்கள் கட்டுதலை உறுதி செய்தல்.
தீ விபத்து
எரிபொருள், காற்றிலுள்ள ஆக்ஸிஜன், வெப்பம் ஆகிய மூன்று காரணிகளும் சரிவிகிதத்தில் சேர்ந்து எரிவதே ‘தீ’ எனப்படும். கவனக்குறைவு, அறியாமை, அலட்சியம், தவறாகக் கையாளுதல் போன்றவற்றின் காரணமாகப் பொருட்களின் மீது தீ பரவ உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தும் நிகழ்வே, ‘தீ விபத்து’ எனப்படுகிறது.
மூன்று காரணிகளுள் (காற்று, எரிபொருள், வெப்பம்) ஏதேனும் ஒன்றை நீக்குதல், பள்ளிக்கு அருகில் குப்பைக் கூளங்களை எரிக்காமை, தீத்தடுப்பான்களை முறையாகப் பராமரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறையை அறிந்துகொள்ளுதல், அவசரக் காலங்களில் உடனடியாக வெளியேற மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல்.
மின் விபத்துகள்
பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மின்சாதனங்களைப் பயன்படுத்துதல், மழைக்காலங்களில்/ இரவில் அறுந்துகிடக்கும் மின்கம்பிகளை மிதித்தல், மின்னோட்டமுள்ள ஈரமான சுவர்கள் மற்றும் மின்கம்பங்களைத் தொடுதல் போன்ற பல காரணங்களினால் விபத்துக்களும் உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.
பாதுகாப்பு முறைகள் மின்சாரம் கடத்தாப் பொருளைக் கொண்டு விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றுதல், பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றால், அதனை நீக்க நடவடிக்கை எடுத்தல், தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்தல், அனுபவமுள்ள மின் பணியாளரைக் கொண்டு பழுது நீக்குதல்.
கூட்ட நெரிசல்
கோவில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், இசைநிகழ்ச்சிகள், பொருட்காட்சி, மாநாடுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் பெருமளவில் திரண்டு கூடியிருக்கும்பொழுது, ஏதோ ஒரு காரணத்தினால் திடீரெனக் கட்டுப்பாடின்றிக் குழப்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி அனைவரும் முட்டிமோதிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் ஓடுவதால், ‘கூட்டநெரிசல்’ ஏற்படுகிறது.
இக்கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள், எலும்பு முறிவு, சுவாசப் பிரச்சினை, உடைமை இழப்பு முதலியன ஏற்படுகின்றன.
மாணவர்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பள்ளி நுழைவாயில், வழிபாட்டு இடம், மாடிப்படிகள், வகுப்பறை முகப்பு, படிக்கட்டு வளைவுகள், சத்துணவு வழங்குமிடம், பள்ளி விழாக்கள், கண்காட்சி, வண்டிகள் நிறுத்துமிடம் ஆகியவற்றிற்கு வரிசையில் செல்லுதல் வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் வெளியேறும் வழிகள் முன்னரே அறிந்திருக்க வழிகாட்டுதல்.
கலவரம்
மக்களுக்கும், மக்கள் உடைமைகளுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கச் செய்யும் வன்முறைச் செயலே, ‘கலவரம்’ எனப்படுகிறது.
கலவரச் சூழலின் போது பள்ளி நுழைவாயில் கதவை மூடிப் பூட்டுதல், வகுப்பறைக் கதவு, சன்னல்களை மூடிவைத்தல், காவல்துறைக்குத் தகவல் தருதல், கலவரத்திற்கு பிறகு பாதுகாப்பாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்புதல்.
ஏதேனும் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்பட்டவரை உடடியான மருத்துவ மனைக்கு வெட்டுக்காயம் மற்றும் இரத்தப்போக்கு கொண்டு செல்வதற்கு முன் செய்யப்படும் எளிய உதவிகள் முதலுதவி எனப்படும்.
காயம்பட்ட இடத்தில் சுத்தமான துணி அல்லது பருத்திப்பஞ்சு வைத்து அழுத்திப் பிடித்தல் காயம்பட்டவரைப் படுக்க வைத்தல், குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தல், வெட்டுப்பட்ட இடத்தை உயர்த்திப் பிடித்தல்.
மயக்கமடைந்தவரின் இறுக்கமான ஆடைகளைத் தளர்த்துதல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்து, காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்தல், முகத்தில் தண்ணீர் தெளித்தல், மயக்கம தெளிந்தவுடன் குடிப்பதற்குச் சிறிது, சிறிதாகத் தண்ணீர் கொடுத்தல்.
பள்ளி பேரிடர் மேலாண்மை என்றால் என்ன? குழுவை எப்படி உருவாக்குவது?
பள்ளியில் சிலநேரங்களில் ஏற்படும் இயற்கை மற்றும் செயற்கை இடர்களிலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையே, ‘பள்ளிப் பேரிடர் மேலாண்மை’ எனப்படும்.
பள்ளிப் பேரிடர் மேலாண்மைக் குழு அமைத்தல்
பள்ளியில் பேரிடர் மேலாண்மை செய்வதற்கு ஒரு குழு அமைத்து செயல்படுத்த வேண்டும். அக்குழுவே, பள்ளிப் பேரிடர் மேலாண்மைக் குழு எனப்படுகிறது.
இக்குழுவில் இடம் பெற வேண்டியவர்கள்
❖ பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள்
❖ உள்ளூர் பொதுமக்கள்
❖ பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்
❖ பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்
❖ தன்னார்வத் தொண்டு அமைப்பினர்கள்
❖ தன்னார்வ மாணவர்கள்
❖ கிராமச் செவிலியர்
❖ இளைஞர் நற்பணி மன்றத்தினர்
❖ காவல் / தீயணைப்புத் துறை சார்ந்தவர்கள்
பேரிடர் மேலாண்மையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு
• இயற்கைப் பேரிடர் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் வழங்குதல்.
• இயற்கைப் பேரிடர் காலங்களில் பள்ளியையும், குழந்தைகளையும் பாதுகாத்தல்.
• மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் வழங்குதல்.
• விபத்துக் காலங்களில் முதலுதவி செய்வதற்கான பயிற்சியை அனைவருக்கும் வழங்குதல்.
• அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யப்பட்டிருப்பதை உறுதி
செய்தல்.
• குழந்தைகளுக்கு இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியினை வழங்குதல்.