You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கொரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

கொரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

சென்னை : கொரோனாவால் தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியை வைப்புத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால், பலர் பாதிக்கப்பட்டு மரணித்துள்ள நிலையில், இதில் பல குழந்தைகள் தாய், தந்தையை இழந்து நிற்கதி ஆகியுள்ளனர். சில குழந்தைகள் உறவினர்கள் அறவினைப்பிலும், சிலர் மாவட்ட குழந்தைகள் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயாில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை வட்டியோடு குழந்தைக்கு வழங்கப்படும். அவர்களுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்பட வேண்டும்.

குழந்தைகள் பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா நோய் தொற்றினால், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது உறவினர், பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகள் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ரூ மூன்று ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே, தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்பட வேண்டும்.

இதை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.