தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு 610 மதிப்பெண் பெற்றதாக போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பித்தது, போலி தரவரிசை பட்டியல் சமர்ப்பித்தது, கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் தயாரித்து மோசடி செய்ததாக பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலச்சந்திரன் மீது மருத்துவ கல்வி இயக்ககம் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், தந்தை, மகள் இருவரும் தலைமறைவாகினர். பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இவர்கள் செல்போன் சிக்னல், உறவினர்கள் செல்போன் சிக்னல் உதவியுடன் பெங்களூருவில் பதுங்கி இருந்த பாலச்சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு பாலச்சந்திரனை ஆஜர்படுத்தி, வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தீக்ஷா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த மனோகரன், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சிறப்பு பிரார்த்தனைக்காக அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளார். அதிகாலை வீடு திரும்பியதும், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவா், வீட்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், வரும் 4ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 4ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும், 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை பொது பட்டியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதனை தொடர்ந்து 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நிர்வாக இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித்குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது, கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டில் அதிக வாய்ப்புகள் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் 200 விளையாட்டு போட்டிகள் நடத்தி, மாநில அளவில் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். நாகை மாவட்டத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று உள்ளதால், விரைவில் உலக அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நாகையில் நடத்தப்படும். இந்த போட்டியில் 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய மாணவர்கள் உலக அளவிலான போட்டிகளில் அதிகம் பங்கு பெற உலக அளவிலான விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் அதிகமாக நடத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் தமிழக அரசு விளையாட்டு துறைக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது என்றார். திருவாரூரில் 27ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியது, டிஎன்பிஎஸ்சி அறிவித்தபடி, இலவச குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 6ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது