மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே. ஈசுவரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை :
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IISC, AIIMS போன்றவை உலகத்தரத்திலான கல்வி நிறுவனங்களாகும். இங்கு படித்து முடிப்பவர்களுக்கு மற்ற கல்வி நிறுவனங்களை விட அதிக வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை பெறவும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதுபோன்ற கல்விநிறுவனங்களிலும் ஏழை கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் இடம் பெறவேண்டும்.
ஆனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுகல்வி நிறுவனமான சென்னை IIT யில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருவர்கூட இடம் பெறுவதில்லை என்பதுதான் வேதனையான ஒன்றாகும். சென்னை IIT யில் கடந்த 10 ஆண்டுகளாக சேர்ந்த தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை பெற தகவல் அறியும் உரிமை சட்டப்படி விண்ணப்பம் அளித்திருந்தேன். ஆனால் அந்த தகவலை தர சென்னை IIT நிர்வாகம் மறுத்துவிட்டது.
தமிழக மருத்துக்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசிற்கு இருந்ததால் இதற்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.இதே அக்கறை மத்திய அரசிற்கும் வேண்டும் என நினைக்கிறோம்.
மாநில அரசு நடத்திவரும் மருத்துவக்கல்லூரிகளில் இளம்நிலை படிப்புகளுக்கு 15 சதவீதமும்,முதுநிலை படிப்புகளுக்கு 50 சதவீதமும் மத்திய அரசிற்கு வழங்க வேண்டும்.ஆனால் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்த நிறுவனம் அமைந்துள்ள மாநிலங்களுக்கு எந்த ஒதுக்கீடும் வழங்கப்படுவதில்லை. (NIT தவிர ) இது நீதிக்கு புறம்பானதாகும். இனிமேலாவது அந்தந்த மாநில அரசுகளுக்கு குறைந்தது 20 சதவீத இடங்களையாவது மத்திய அரசு வழங்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள IIT களில் மாணவிகளின் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதை கவனத்தில் எடுத்து பெண்களுக்காக IIT யில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இது மிகவும் நல்ல திட்டமாகும்.இதனை பாராட்டுகிறோம். அதே போல மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை முற்றிலுமாக இல்லாத நிலையை மாற்ற என்ன செய்வது என்ற ஆய்வை மத்தியஅரசு தொடங்க வேண்டும்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளதைப்போல அந்தந்த மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்போகிறோம்.
இந்த நிகழ்வை வரும் 10.08.2021 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று ஈச்சனாரியில் தொடங்க உள்ளோம். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |