ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஊற்றாக விளங்குவது அரசு பள்ளி தான். “நம்ம பிள்ளைகளாவது நல்ல படிச்சு, நல்ல இருக்கனும்” என்கிற ஏழை பெற்றோரின் கனவு, ஒவ்வொரு குழந்தையின் முகத்தில் எதிரொலிக்கும். அந்த கனவை சிதைக்கும் வகையில் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் பள்ளிகளில் இருக்கதான் செய்கிறார்கள். இவர்களின் தவறான எண்ணம் பல பெண் குழந்தைகளின் வாழ்கையை முற்றாக சீரழிக்கிறது. இதுபோன்ற இந்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த துவார் கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் ஒருவர். இவர் அங்குள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 50 வயதுடைய இன்னொருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அந்த பள்ளியில் படிக்கும் ஆறு மாணவிகளுக்கு ஆசிரியர் கடந்த 2018ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இவர் மீது தலைமை ஆசிரியர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கை, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மூன்று பிரிவுகளில் 49 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.45 ஆயிரம் அபராதமும், தலைமை ஆசிரியருக்கு ஒராண்டு சிறை தண்டணையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு கூறிவரும் நிலையில், குழந்தைகளுக்கு அரணாக இருக்க வேண்டியவர்களே இப்படி செய்தால், என்னவாகும் இந்த பெண் குழந்தையின் கல்வி? வாழ்க்கை? எதிர்காலம்?….
ஒரு சிலரின் இந்த தவறான செயலால், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கு களங்கம், இழுக்கு, மாண்பு சிதைவு ஏற்படுகிறது. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், பெண் குழந்தையை பாதுகாப்பதில் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.